Tuesday, November 05, 2013

பாசம்

ஏங்க, இன்னிக்கு உங்க அம்மா என்ன பண்ணுனாங்கன்ணு தெரியுமா ?…
 அலுவலகத்தில் இருந்து வந்த கணேஷிடம் அவனுடைய மனைவி, அவன் அன்னையை பற்றி குறை கூற ஆரம்பித்தாள்
 இது ஒன்றும் புதிதல்ல இவனுக்கு
 திருமணமான சில மதங்களில் மாமியாரை குறை கூற ஆரம்பித்தவள்,  சிறிது சிறிதாக  சண்டை போட ஆரம்பித்து ஒரு சமயத்தில் முதியோர் இல்லம் சென்று விடும் அளவிற்கு சென்றது

அவனுடைய அம்மாவின் பொறுமையினாலும் குழந்தைகளை தனியாக வளர்க்க முடியாது என்பதாலும் அவன் மனைவி சிலகாலம் பொறுமையாய் இருந்தவள்
  இப்போது குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டதனால் தனது மாமியார் தனக்கு சுமை எண்று நினைத்தாலோ, என்னவோ பழையபடி மாமியாரை குறை கூற ஆரம்பித்துவிட்டாள்.

தீபாவளிக்கு விடுமுறை எடுத்ததால் நிறைய வேலைசுமைகளை கடந்து தலைவலியுடன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தவனுக்கு இவளின் வார்த்தைகள் அவள் மேல் கோவத்தை வரவைத்தது

அவளிடம் தனது கோவத்தினையும், வலியையும் காட்டாமல் பொறுமையாக “என்னவாயிற்று” என்று வினவியவனிடம்

பள்ளிகூடம் விட்டு வந்த நம்ம பிள்ளைகளுக்கு நான் இனிப்பு பலகாரம் எல்லாம்  கொடுத்து அவர்களை விளையாட சொல்லிவிட்டு வீட்டு வேலைகளை பார்த்துகொண்டிருந்த நேரம் குழந்தைகள் அழுதுகொண்டு இருந்தாங்க

நான் என்ன என்று கேட்டதும்  என்னிடம் வந்து “பாட்டி பலகாரத்தினை பிடுங்கிகிட்டாங்கன்னு,  அழுதுகிட்டே சொன்னங்க” என்றாள் கோபமுடன் …..

இவனுடைய கோவம் இன்னும் அதிகமாகி மேலும் அவனுடைய பார்வை அம்மாவின் பக்கம் திரும்பியது

கோவமாக வாயில் பக்கம் ஒரு போர்வைக்குள் முடங்கி இருந்த அந்த வயோதிக அம்மாவிடம் சென்று  கடும்சொற்களால் திட்ட ஆரம்பித்தான்.

ஒரு வழியாக திட்டி முடித்த பின் அவனுடைய அம்மா

அவன் முகத்தை பரிதாபத்துடன் பார்த்து

என்ன ப்பா  அலுவலகத்தில் நிறைய வேலையா, ரொம்ப களைப்பா வந்து இருக்கியா என்றவள்.

இந்தாப்பா இந்த பலகாரம் உனக்குன்னுதான் எடுத்து வச்சேன். உனக்கு கண்டிப்பா உன் மனைவி உனக்கு கொடுக்கமாட்டான்னு எனக்கு தெரியும்

அதனாலதான் என் பேரபிள்ளைகளிடமிருந்து வாங்கி உனக்குன்னு எடுத்து வைத்தேன்

இந்தாப்பா பலகாரம் சாப்பிடு – என்றாள்

அப்படியே சிலையாக நின்றிருந்தவனிடம்

ஆயிரம் தான் இருந்தாலும் நீ என்னுடைய பிள்ளை ப்பா  பாவம் நீதான் எவ்வளவு கஷ்டபடுவ

உனக்கு பாரமா இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன் ஆனால் என்ன செய்றது….

மேலும் தனது அம்மாவை பேசவிடாமல் தனது கண்களில் வழிந்த கண்ணீருடன் அம்மாவை வீட்டின் உள்ளே அழைத்து சென்றான்