Saturday, October 29, 2011

நல்ல நண்பன் யார்?

தீய பழக்கங்களுக்கு அடிமையாக்குதல்
"புகைப் பிடிக்கவில்லை என்றால் நீ ஒரு ஆம்பிளையே இல்லை"
என்று உசுப்பேற்றும் நண்பர்கள் ஏராளம்.
நட்பை மதிப்பவனாயிருந்தால், ஒழுங்கா புகைப்பிடி என்று அன்பான எச்சரிக்கை கொடுத்து பலரை புகைக்கு அடிமையாக்குபவர்களும் ஏராளம்.
நண்பர்களின் மனம் கோணக்கூடாதே என்பதற்காக புகைப்பிடித்து, அதற்கு அடிமையாகி, தங்களின் ஆரோக்கியத்தை பலிகொடுத்தவர்கள் பலர்.

இதே போன்றுதான் மது பழக்கமும்.

"தண்ணியடிக்காதவனை எந்தப் பொண்ணும் ஆம்பிளை என்று மதிக்கமாட்டாள்" என்று அபத்தமாக சொல்லி, அதற்கு பழக்கிவிடும் நண்பர்களும் அதிகம்.
பலர், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போதே, புகை மற்றும் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர்.
எனவே பள்ளி சான்றிதழ் மற்றும் கல்லூரி பட்டங்களுடன், பல கெட்டப் பழக்கங்களையும் தீய நண்பர்களின் மூலம் நாம் உள்வாங்கிக் கொள்கிறோம்.
புகை மற்றும் மதுப் பழக்கம் மட்டுமின்றி, வேறு பல ஒழுக்கக்கேடான விஷயங்களிலும் நமது ஆர்வத்தைத் தூண்டி, ஏதாவது ஒரு பொருந்தாத காரணத்தை சொல்லி, நம்மை அந்த ஆபத்தில் ஈடுபட வைக்கிறார்கள்.
இதன் மூலம் நாம் நமது கவனத்தை இழப்பதோடு, உயிர்கொல்லி நோய்கள் உள்ளிட்ட சில ஆபத்துக்களுக்கும் ஆளாகிறோம்.
மேலும், ஒழுங்காக படித்து, ஆராய்ச்சி செய்யும் ஒரு மாணவனை கிண்டலடிப்பதோடு, வயசுப் பையன் அல்லது பெண் இவ்வாறு இருக்கக்கூடாது என்றும், வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறி மனதைத் திருப்புகின்றனர்.
ஆனால் அந்த சந்தோஷம் என்பது சில வருடங்களுக்குத்தான் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
இளமையில் முயற்சி செய்யாமல், தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் மாணவர்கள், தமது வாழ்நாள் முழுவதும் சீரழிவார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு சவால்கள் அதிகம்.
எனவே, பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
நண்பர்கள் தங்களின் மகிழ்ச்சி மற்றும் சோகத்தைப் பகிர்ந்துகொள்ள, மதுவை ஒரு துணையாக்கிக் கொள்கின்றனர்.
 நல்ல நண்பன் யார்?
ஒரு நல்ல நண்பன், எப்போதுமே, தனது சக நண்பனின் முன்னேற்றம் மற்றும் நலன் சார்ந்த விஷயங்களிலேயே அக்கறையாக இருப்பான்.
தனது நண்பன் தீமைகளின் பக்கம் சென்றால்கூட, புத்திசொல்லி திருத்த முயற்சிப்பான்.
ஒருவேளை, தான் ஏதேனும் கெட்டப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாலும்கூட, தன் நண்பன் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகாதபடி தடுப்பான்.
அந்த நல்ல நண்பன் சீரிய சிந்தனைக்கும், அறிவு முன்னேற்றத்திற்கும், ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கும் எப்போதும் துணை நிற்பான்.
அவனும் உயர்வதோடு, தன்னை சார்ந்தவன் உயரவும் அவன் காரணமாக இருப்பான்.

No comments:

Post a Comment