Wednesday, May 09, 2012

மயிலிறகாய் ஒரு காதல்…!!!



பரிணாம வளர்ச்சியில்
பெண்ணிற்கு பின் தேவதை – என்பதற்கு
நீ ஒருத்தியே சாட்சி.

உணவருந்தும் முன்
ஒரு நிமிடம்
கண்மூடி இறைவனுக்கு
நன்றி சொல்கிறாய் நீ….

ஒரு மிகச்சிறந்த
ஓவியத்தின்
இறைவழிபாடு கண்டு
என்னை மறந்துபோகிறேன் நான்…..

ஆற்றில் குளித்துவிட்டு
கரையேறுகிறாய் நீ….
ஆற்றுமீன்கள் எல்லாம்
துள்ளிவிழுந்து மரிக்கின்றன…
பிறவி பயன் அடைந்துவிட்டோம்
என்று முணுமுணுத்தபடி..

உனக்கான கவிதைகளைக்கண்டு
என் புறங்கையில் முத்தமிடுகிறாய்…
எங்களுக்கு விரல்கள்,
உனக்கு மட்டும் இதழ்களா என்று
கவிதைகளெல்லாம் ஒன்றுகூடி
என்னைப் பழிக்கின்றன!

படபடவென்று பேசிக்கொண்டிருக்கும்
உன் இதழ்களை மூடிவிடுகிறேன்….
படபடக்கும் உன்
விழிகளால் பேச்சைத்தொடர்கிறாய் நீ….
பட்டாம்பூச்சி பின் ஓடுகின்ற
சிறுவனாக மாறிவிடுகிறேன் நான்….

தெருவெல்லாம் வீழ்ந்துகிடக்கின்றன
பன்னீர் பூக்கள்….
பன்னீர்பூ மரத்திற்கு
யார் சொன்னது உன் வருகையை?

கன்னுக்குட்டியுடன்
நீ விளையாடுவது கண்டு
குழம்புகிறது தாய்ப்பசு
எது தன் பிள்ளை என்று!

கண்ணீரை மறைத்துக்கொண்டே
சிரிக்கவும் தோன்றியது…
புன்னகைத்துக்கொண்டே
அழவும் தோன்றியது….
நீ காதல் சொன்ன நிமிடங்களில்….

தன் சிறிய சிறகுகளால்
வானம் முழுவதும்
பறந்துவிட துடிக்கும்
பட்டாம்பூச்சி போல
மாறிவிடுகிறது என் மனசு….
உன் மடியில் நான்
தலைசாய்கின்ற பொழுதுகளில்.

அடைமழையிலும் புன்னகைக்கும்
பூக்கள் போன்றது
கோபப்படும் நேரங்களிலும்
என் விரல்பற்றி மென்மையாய்
நீ பேசும் தருணங்கள்….
எத்தனை முயன்றும்
இருவருக்கும் தெரியவில்லை
எதனால் ஓர்
உயிரானோம் என்று…..
நம் நிழல்களுக்கும்
இதே குழப்பம்….

தேவதையை பார்க்கவேண்டும்
என்கிற என் சிறிய
வயது ஆசையை
பூர்த்தி செய்தவள் நீ….

ஆனாலும் உன்னிடம்
ஒன்று கேட்க வேண்டும்..
“நீ என்ன உயிர்
வாங்கும் தேவதையா?”

அழகான வெள்ளை
நிற உடையில் வரும்
உன்னைப் பார்த்து,

“தேவதை” என்று சொல்லாமல்
“அழகாய் இருக்கிறது”
என்று மட்டும் சொல்லும் உன்
தோழிகளின் ரசனையை
என்ன வென்று சொல்வது?

மழையில் நடக்கும்போது
விரித்திருந்த உன் குடைமடக்கி
வானம் பார்த்து தலையசைத்து
மழையை வரவேற்கிறாய்.

இது,
நீ தேவதை
என்பதற்கு மற்றுமொரு
அழகிய சாட்சி…..

கடவுள் நம்பிக்கை
இல்லை என்கிறார்
உன் அப்பா…
மஹாலட்சுமி
உன்னை வீட்டில்
வைத்துக் கொண்டு…!

இந்த உலகத்திற்கு
நீ என்ன செய்தாய்
என்று யாரும் என்னை
கேட்டுவிட முடியாது…..
தேவதை உன்னை
இவ்வுலகிற்கு அறிமுகம்
செய்தவனே நான் தானே…!

நீ கோலமிட
வாசல் வரும்போதெல்லாம்
என் இதயதேசம் தவிக்கிறது…
கோலமிட இளவரசியா வருவதென்று!
                                                   

No comments:

Post a Comment