Saturday, April 21, 2012

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-10



கடந்த பதிவில் மாயனின் கணித அறிவைப் பற்றி விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக,  அவர்களின் கணிதத்தை அதிகமாக விளக்கியது, பலருக்குப்புரிந்திருக்கலாம், சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். புரியாமல் இருந்தது பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. எமக்குப் புரிய வேண்டியது, மாயன்கள் கணிதத்தில் வல்லவர்களாக இருந்தார்கள் என்பது மட்டும்தான். அமெரிக்கா என்று சொல்லப்படும் மிகப் பெரிய நிலப்பரப்பு, வட அமெரிக்கா, மத்தியஅமெரிக்கா, தென் அமெரிக்கா என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மத்தியஅமெரிக்காவில் மெக்சிக்கோ, குவாத்தமாலா, எல் சல்வடோர், கோஸ்டா ரீகா,கொண்டுராஸ், பனாமா, நிக்கரகூவா, பெலிசே, ஹைட்டி, கியூபா போன்ற நாடுகள் இருக்கின்றன. 'உலக அழிவுப் புகழ்' மாயன்கள் வாழ்ந்து வந்த இடமும் இந்த மத்தியஅமெரிக்க நாடுகளில்தான். குறிப்பாக மெக்சிக்கோவிற்கு தென்கிழக்குப் பகுதியில்ஆரம்பித்து, ஏறத்தாழ மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் (350000) சதுர கி.மீபரப்பளவுள்ள நிலப்பரப்பில் மாயன்கள் வாழ்ந்து வந்தார்கள்.


மாயனின் வரலாறு கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகியிருக்கிறதுஎன்பதற்கு சரித்திர ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனாலும் கி.மு.2000 முதல்கி.பி.900 ஆண்டுகள் வரை உள்ள காலப் பகுதிகளில்தான் மாயன்களின் நாகரீகம் உச்சத்தை அடைந்திருந்தது. இந்தக் காலகட்டங்களில், உலகின் பல நாடுகளில், பல இனங்களுக்கிடையே மதங்கள் தோன்றியிருந்தன. அப்படித் தோன்றிய மதங்களும்,அதனைக் கடைப்பிடித்த இனங்களும், நாம் வாழும் பூமிதான் பிரதானமானது என்று நினைத்திருந்தார்கள். பூமியை மையமாக வைத்தே சூரியன் உட்பட அனைத்துக்கோள்களும் இயங்குகின்றன என்றும் நம்பி வந்தார்கள்.





கடவுள் முதலில் பூமியை உருவாக்கினார். அதன் பின்னர் பூமி இருட்டாக இருக்கிறதுஎன்று கருதி, சூரியனையும், சந்திரனையும் படைத்தார் என்று பைபிள், குரான், யூதமதம்ஆகிய மூன்று பிரதான மதங்களும் சொல்கின்றன. இந்து மதத்தின் உபவேதங்களில்ஒன்றான, 'ஜோதிசம்' எனச் சொல்லப்படும் சோதிடத்தில், பூமியை மையமாக வைத்துநவக்கிரகங்கள் சுற்றுகின்றன என்ற அடிப்படையிலேயே கணிப்புகள் யாவும் இருந்திருக்கிறது.


அஸ்ட்ராலாஜி (Astrology), அஸ்ட்ரானாமி (Astronomy) என்னும் இரண்டு ஆங்கிலச் சொற்களை  நாம் அடிக்கடி பாவித்தாலும், அவை இரண்டினதும் வித்தியாசத்தைப் பற்றிபெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. வானத்தில் இருக்கும் கோள்களைப் பற்றியும்,நட்சத்திரங்களைப் பற்றியும் இந்த இரண்டுமே சொல்வதால், இவற்றை அனேகர்ஒன்றாகவே பார்க்கின்றனர். ஆனால் அஸ்ட்ரானாமி என்பது விஞ்ஞானம், அஸ்ட்ராலாஜிஎன்பது சாத்திரம். அதாவது ஒன்று வானவியல் மற்றது வானசாத்திரம்.





மாயன் காலங்களில் உலகில் உள்ள பல இனத்தவர்கள், வானத்தில் உள்ள நட்சத்திரங்களினதும், கோள்களினதும் நகர்வுகளைக் கவனித்தே வந்திருக்கிறார்கள்.ஆனால் எல்லோரும் 'வான சாத்திரம்' என்னும் நிலையில்தான் அவற்றைக்கவனித்திருக்கிறார்கள். மாயன்களோ அவற்றை 'வானவியல்' என்னும்அறிவியல் சிந்தனையுடன் வானத்தை ஆராய்ந்திருக்கிறார்கள்.  இதுவே இன்று அவர்கள்வசம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மாயன்கள் மிகத் துல்லியமாகசூரியன், பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வியாழன் போன்ற கோள்களின்அசைவுகளைக் கவனித்திருக்கிறார்கள், கணித்திருக்கிறார்கள்.


மாயன்களின் வானியல் கணிப்பை உலகுக்கு உரத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவொன்று இன்றும் மாயன்கள் வாழ்ந்த இடமொன்றில் நிமிர்ந்து நிற்கிறது.மெக்சிக்கோ நாட்டில் உள்ள யூகட்டான் (Yucatan) மாநிலத்தில், மாயன்களால் கட்டப்பட்ட 'ஷிசேன் இட்ஷா' (Chichen Itza) என்னும் பிரமிட்தான் அது. 'பிரமிட்' (Pyramid)என்றதும் எகிப்தின் பிரமிட்கள்தான் உங்களுக்கு ஞாபகம் வரும். "மாயன்களிடமும் பிரமிட் இருந்ததா?" என்று நீங்கள் பிரமிக்கலாம். 'உலகின் விந்தைகளும், மர்மங்களும் கடைசியில் ஒரு புள்ளியில் ஒடுங்கிவிடும்' என்று நான் ஆரம்பத்தில் சொன்னது போல, எல்லாவற்றிற்கும் இடை யில் ஏதோ தொடர்புகள் இருக்கலாம். அவற்றை பின்னர் பார்ப்போம். அதற்கு முன்னர் ஷிசேன் இட்ஷா பற்றிப் பார்க்கலாம்.




வானியலை மாயன்கள் எந்த அளவுக்குப் புரிந்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இந்தப் பிரமிட்டை அவர்கள் கட்டியிருக்கிறார்கள். நான்கு பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரமிட்டில், வரிசையாக ஒவ்வொரு பக்கமும் படிகள் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நான்கு பக்கங்களும் நான்கு பருவ காலங்களைக்குறிக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திற்கும் தலா 91 படிகள் இருக்கின்றன. மொத்தமாகநான்கு பக்கங்களும் சேர்த்து 364 படிகள். ஆனால், வருடத்திற்கு 365 நாட்கள் அல்லவாஇருக்கிறது. அதை எப்படி நான்காகப் பிரிப்பது? ஒரு படி மிஞ்சுமல்லவா?  என்னசெய்தார்கள் மாயன்கள்? கடைசியாக உச்சத்தில் ஒரு மேடையை ஒரே படியாக,சதுரமாகக் கட்டிவிட்டார்கள். மொத்தமாக 365 படிகள் வந்துவிட்டது. ஒரு வருடத்தின் நாட்களை பிரமிட்டாகவே மாயன்கள் கட்டியிருப்பது, ஆராய்ச்சியாளர்களை இன்றும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.





பூமி, சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் எடுக்கிறது என்பதை மாயன்கள் எப்படிக்கணித்தார்கள்? இந்தத் துல்லியமான வானவியல் கணிப்பு முறையை எப்படி அறிந்துகொண்டார்கள்?  நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை இயங்கும் விதத்தை எப்படி அவதானித்தார்கள்? என்னும் கேள்விக்கெல்லாம் பதில் மாயன்கள் வாழ்ந்த இடத்திலேயே எமக்குக் கிடைத்தது. அதை அறிவதற்கு முன்னர் இந்தப் படங்களைப் பாருங்கள்.











இவையெல்லாம், நாம் தற்போது வானத்தில் உள்ளவற்றை ஆராய உபயோகிக்கும் சில வானவியல் அவதான நிலையங்கள் (Observatory Dome). வேறு வேறு இடங்களில்இருப்பவை.


என்ன பார்த்துவிட்டீர்களா……….?


இப்போ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாயன்களால் வானத்தில் உள்ளநட்சத்திரங்களையும் கோள்களையும் அவதானிக்கக் கட்டப்பட்ட கட்டடத்தைப்பாருங்கள். யார் யாரிடம் இருந்து எடுத்துக் கொண்டார்கள்? இப்படி ஒரு ஒற்றுமை எப்படி நிகழலாம்? அல்லது இது ஒரு இயல்பான கட்டட வடிவமைப்பா….? எல்லாமே தற்செயல்தானா...? சரி, அதை நீங்களே பாருங்கள்!








வானத்தை ஆராய்வதற்கென்று தனியாக அவதானிப்பு நிலையம் ஒன்றை மாயன்கள் அந்தக் காலத்திலேயே கட்டியிருக்கிறார்கள். அப்ப்டிக் கட்டியிருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல, அது நவீன காலத்து அவதானிப்பு நிலையத்துடன் பொருந்தும்படி கட்டப்பட்டிருப்பதுதான் வியப்பை அளிக்கிறது.


ஒரு மனிதன், தன்னையும் தான்சார்ந்த சமூகத்தையும் திடமாக நிலைப்படுத்தி அமர்ந்துகொள்வதற்கு, தனக்கென ஒரு கலாச்சார நாற்காலியைத் தயார்படுத்துகிறான். அந்தக்கலாச்சார நாற்காலியை இனம், மொழி, மதம், நாடு என்ற நான்கு கால்களுடன் அவன்அமைத்துக் கொள்கிறான். உலக நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு இனமும், தனக்கெனஒரு தனித்துவத்தையும், அடையாளத்தையும் காத்து வைத்திருக்கவே விரும்புகின்றது.அப்படி அவர்கள் விரும்பும்  அடையாளத்தில், அவர்களுக்கென உருவாக்கிய நாட்காட்டிகளும் (காலண்டர்) அடங்குகின்றன. இந்த அடிப்படையில், உலகமக்களிடையே பல நாட்காட்டிகள் வழக்கத்தில் உண்டு. வெவ்வேறு நாட்காட்டிகள் இருப்பது குழப்பத்தை உருவாக்கியதால், பின்னாட்களில் அனைவருக்கும் பொதுவாக இருக்கட்டும் என ஒரு நாட்காட்டியைக் கொண்டு வந்தனர். அப்படி தற்காலப்பாவனைக்கு நாம் வைத்திருக்கும் நாட்காட்டி, கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian calendar)எனப்படுகிறது. கிரிகோரியன் என்பவர் வத்திக்கானில் பாப்பாக இருந்தவர்.





கிரிகோரியன் நாட்காட்டி, தை மாதத்தில் ஆரம்பித்து மார்கழி மாதம் வரை 365நாட்களையும்,  நான்காவது வருடம் 'லீப் வருடம்' என்னும் பெயரில் 366 நாட்களையும்கொண்டிருக்கும். இது போலவே மாயன்களும் தமக்கென தனியாக நாட்காட்டியைக் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் தமக்கென ஒரு நாட்காட்டியை அல்ல, மூன்றுநாட்காட்டிகளை உருவாக்கி வைத்திருந்தனர். அவை மூன்றும் வெவ்வேறுஅடிப்படையகளில், வித்தியாசமாக அமைக்கப்பட்டவை.


'ஷோல்டுன்' (Choltun), 'ஷோல் அப்' (Chol’ab’), 'ஷோல் கிஜ்' (Chol q’ij) என்னும் மூன்றும்தான்மாயன்களிடம் இருந்த நாட்காட்டிகள். இதில் 'ஷோல்டுன்' என்னும் முதல் நாட்காட்டி,சூரியக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அசைவுகளைக் கொண்டு கணக்கிடப்பட்ட நாட்காட்டியாகும். இது நீண்ட 'காலக் கணக்கைக்' (Long count) கொண்டது. இதுதான் எங்கள் உலக அழிவு பற்றி இன்று பேசப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த நாட்காட்டி. அது பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.


'ஷோல் அப்'  என்னும் இரண்டாவது நாட்காட்டி, எமது கிரிகோரியன் நாட்காட்டி போல,சூரியனைப் பூமி சுற்றும் சூரிய நாட்காட்டியாகும். இது 365 நாட்களைக் கொண்டது.ஷோல்க் 'இஜ் என்னும் மூன்றாவது நாட்காட்டி 260 நாட்களைக் கொண்ட நாட்காட்டி.




நாம் முதலில் 'ஷோல் அப்' நாட்காட்டி பற்றிப் பார்க்கலாம். இந்த நாட்காட்டி மொத்தமாக 19 மாதங்களைக் கொண்டது. அதில் 18 மாதங்கள், ஒவ்வொன்றும் 20நாட்களைக் கொண்டவை. மொத்தமாக 18x 20 = 360  நாட்கள் வருகிறது. கடைசியாக வரும்19 வது மாதம் 5 நாட்களைக் கொண்டது. மொத்தமாக 365 நாட்கள். மாயன்களின் முதல் மாதத்தின் பெயர் 'பொப்' (Pop) என்றும், கடைசி மாதம் 'வேயெப்' (Weyeb) என்றும் அழைக்கப்படுகிறது. அது போல, மாதம் தொடங்கும் முதல் நாள் 0 (பூச்சியம்) என்றும்,மாதம் முடிவடையும் நாள் 19 என்றும் அழைக்கப்பட்டது. கடைசி மாதமான 'வேயெப்'மாதத்தின் முதல் நாள் 0 எனவும், கடைசி நாள் 4 எனவும் குறிக்கப்படுகிறது.


மாயன்களின் புது வருடம் 'பொப் 0' (Pop 0) என்ற நாளில் ஆரம்பிக்கிறது. இது எமதுதற்கால நாட்காட்டியின் சித்திரை மாதம் 1ம், 2ம், 3ம் திகதிகளில் மாறி மாறி வரும்.கடைசி மாதமான 'வேயெப்' மாதம், மாயன்களின் சிறப்பான மாதம் ஆகும்.கடவுளுக்கென அர்ப்பனிக்கப்பட்ட 5 நாட்களைக் கொண்ட மாதம் அது. கடவுளை வணங்கிகொண்டாடும் மாதமாக இது அமைகிறது. கிரிகோரியன் உருவாக்கிய நாட்காட்டியின் கடைசி ஐந்து நாட்களின் முன்னர் கிருஸ்து பிறந்தார் என்பதற்கும், அதாவது மார்கழி மாதம் 25ம் திகதி கிருஸ்து பிறந்தார் என்பதற்கும் இதற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா என நீங்கள் நினைத்தால், அப்படி நினைப்பதற்கு நான் பொறுப்பல்ல.


மாயன் நாட்காட்டியின் மேலதிக மர்மங்களுடன் அடுத்த தொடரில் சந்திக்கிறேன்.
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-11


No comments:

Post a Comment