திருக்குறளையும், திருவள்ளுவரையு ம் பெரும்பாலான மக்களுக்கு தெரியும்.
சொல்லப் போனால் குறளும்,வள்ளுவரும் சூப்பர் ஸ்டார் மாதிரி,சும்மா சின்ன குழந்தையை கேட்டாக் கூட தெரியும் .வாழ்க்கைக்கு தேவையான அத்தனை தத்துவமும் திருக்குறளில் அடங்கி இருக்கும.
பலசரக்கு கடை மாதிரி (சரக்குனு சொன்ன உடன் ,நீங்க எதை நினைத்தீர்கள் என்பதை நான் அறிவேன் ) என்னென்ன தேவையோ எல்லாம் கிடைக்கும்.
“எங்கே ஏதாவது ஒரு குறள் சொல்லுங்களேம் பாப்போம்?” என்று அருகில் இருக்கும் ஒரு நபரை கேட்டால் ,ஒரு குறளாவது சொல்வார் .வேண்டும் என்றால் கேட்டுப் பாருங்கள்.அப்படித்தான் என் சக ஊழியர்களை கேட்டேன் .வந்து விழுந்தது ஏகப்பட்ட குறள்கள் .எல்லாம் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த அனுபவம் .
அதற்கு பிறகு யாராவது படித்தார்களா ,படித்திருப்பார்களா என்றுப் பார்த்தால் ,அந்த எண்ணிக்கை மிகச் சொற்பமாகத் தான் இருக்கும் .காரணம் ,அதை வேண்டா வெறுப்பாக படிக்க வைத்த நம் கல்வி முறைதான் .
அது ஒரு புனித நூல் என்பதை எல்லோரும் ஒற்றுக் கொள்வார்கள் .ஆனால் ,அதைப் பின்பற்றுவது என்பது ,இந்த அவசர வாழ்க்கையில் மிக மிகக் கடினம் .உள்ளங் கையில் கிண்ணி முழுக்க எண்ணையை வைத்துக் கொண்டு கீழே சிந்தாமல் ஊர் சுற்ற முயல்வதைப் போல தான் இருக்கும் .
இப்படி இருக்க ,திருக்குறளுக்கு இன்னொரு சிறப்பை நான் காண்கிறேன் .அது ,இந்த வள்ளுவன் என்கிற புலவன் (உண்மையில் வள்ளுவன் என்று யாரும் கிடையாது .திருவள்ளுவர் என்பது ஒரு பொதுப் பெயர் மட்டுமே .யார் எழுதினார்கள் என்பது இன்று வரைப் புலப்படாத செய்தி ) தமிழை கையாண்ட விதம்தான் .இந்த அளவுக்குப் புலமையை வேறு எந்த புலவனிடமும் காண முடியாது என்பது என் திண்ணம்.
உதாரணத்திற்கு, இரண்டு திருக்குறளை கூறுகிறேன் .
விகடன் புத்தகத்தில் ஒரு பேட்டிக் கட்டுரையில் படித்தது .அன்று முதல் கீழ்வரும் இரண்டு குறள்களும் என் மனதிற்கு நெருக்கமான குறள்கள் ஆயின .காரணம் என்ன வென்று அந்த குறள்களை படித்த பிறகு நீங்கள் அறிவீர்கள் .
1) ” யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் . “
பொருள் : அதாவது , நீங்கள் எந்தெந்த ஆசைகளை விட்டு விடுகிறீர்களோ ,அந்தந்த ஆசைகளினால் ஏற்படக் கூடிய எல்லாத் துன்பங்களும் உங்களுக்கு கிடையாது .மனம் எந்த எதிர்பார்ப்பும் அற்று இருந்தால் துன்பம் இல்லை என்பதே அவர் கூற முற்பட்டது .
2)” துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாயத் தூவும் மழை . “
(எல்லோருக்கும் தெரிந்த குரல் தான் ,ஆனால் அர்த்தம் ? )
பொருள் : உணவைச் சமைக்கவும் , சமைத்த உணவை உண்ணும் போது தாகத்தை தீர்க்கவும் கூட மழையானது தான் நமக்கு பயனடுகிறது.
மழை மழை தான்யா ..!
முதல் குறளின் சிறப்பு : அந்த குறளின் எந்த ஒரு வார்த்தைக்கும் உங்கள் உதடுகள் ஒட்டாது . மறுமுறை படியுங்களேன் .
இரண்டாம் குறளின் சிறப்பு : அந்த குறளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் உங்கள் உதடுகள் ஒட்டும்………..
ஒட்டுகிறதா ?
இனி இந்த குறள்கள் உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன் .
முடிந்த வரை ,திருக்குறளை படிக்கவாவது முயற்சி செய்யுங்கள் .
இனிது இனிது தமிழ் இனிது .
No comments:
Post a Comment