Monday, April 30, 2012

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-15

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-15
ராஜ்சிவா 






கடந்த வாரத்தில் எழுதியது போல, மீண்டும் ஒன்றை நினைவுபடுத்த வேண்டிய அவசியம் எனக்கு இப்போதும் உள்ளது. இங்கு நான் கொடுக்கும் எந்தத் தகவலும்,எனக்குச் சொந்தமானவை அல்ல. இவைகளின் உண்மைத் தன்மை பற்றி என்னிடம் எந்த  ஆதாரங்களும் இல்லை. ஆனால் பல ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள், காணொளிகள் என இணையங்களிலும், அச்சு வடிவங்களிலும் ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவை  கொட்டிக் கிடக்கின்றன. 'சதித் தத்துவம்' (Conspiracy Theory) என்னும் பெயரில், இவை காணொளிகளாக வெளிவருகின்றன. இவை இப்படி இப்படி இருக்கின்றன என்று உங்களுக்குச் சுட்டிக் காட்டுவது மட்டுமே எனது வேலை. அத்துடன் என் கடமை முடிந்து போய் விடுகிறது. படித்த பின் சரியான முடிவுகளை எடுப்பது உங்கள் பொறுப்பு. நான் சொல்லும் ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் நீங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தால், நான் சொன்னவை சிறிதளவோ என்று நீங்களே பிரமித்துப் போவீர்கள்.சொல்லாதவை மிக அதிகமாக இருக்கும். இதற்கு மேலும் இது பற்றி நான் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்...........!


கடந்த பதிவில், டென்வெர் விமான நிலையம் பற்றியும் நோர்வேயில்அமைக்கப்பட்ட மரங்களின் பாதுகாப்பு மையத்தைப் பற்றியும் நான் எழுதியது உங்களைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கும் என்றே நம்புகிறேன். அவற்றை யார் முன்னின்று நடத்துகிறார்கள் என்ற கேள்வியும் நமக்குள் எழுந்திருந்தது.அவர்கள் யார் என்பதற்கு ஆதாரம் டென்வெர் விமான நிலையத்திலேயே எமக்குக் கிடைத்தது. டென்வெர் விமான நிலையக் கட்டுமானத்தின்போது,அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பற்றிக் கடந்த பதிவில் கூறியிருந்தேன்.அதன் முழுமையான வடிவம் மேலே உள்ள படத்தில் காணப்படுகின்றது. அந்தப் படத்தைச் சரியாகப் பார்த்தீர்களானால், அதில் ஒரு சின்னம் (Symbol) காணப்படுகிறது.அத்துடன் கீழே 'புதிய உலகம்' (New World) என்னும் வார்த்தைகளும் காணப்படுகிறது. இவை இரண்டுமே எல்லா மர்மங்களையும் எமக்கு தீர்க்கப் போதுமானவையாக இருக்கலாம். 


அவை என்ன என்றுதான் பார்ப்போமே!


'புதிய உலக ஒழுங்கு' என்று தமிழில் சொல்லப்படக்கூடிய 'The New World Order' என்னும் அமைப்பு, உலகத்தின் கோடீஸ்வரர்களையும், தொழிலதிபர்களையும், அரசியல் பெரு முதலைகளையும், அதிகார மையங்களின் உச்சங்களில் அமர்ந்திருப்பவர்களையும் தன் அங்கத்தவர்களாகக் கொண்டது என்று சொல்கிறார்கள். ஒரு மாயச் சங்கிலி மூலம் இவர்கள் அனைவரையும் இந்த அமைப்பு இணைத்து வைத்திருக்கிறது.அந்தச் சங்கிலியின் எந்த ஒரு வளையத்திலும் சாதாரண பாமர மக்களான நாங்கள் இருக்கவே முடியாது. இவர்களின் கொள்கை ஒரே ஒரு உலகம், ஒரே ஒரு பணம்,ஒரே ஒரு வங்கி என்பதுதான். அதாவது உலக மக்கள் அனைவரையும் ஒரே ஒரு சக்தி ஆள வேண்டும். அவர்களுக்குப் பணமாக ஒரே ஒரு பணம் இருக்க வேண்டும்.அந்தப் பணத்தை நடை முறைப்படுத்துவதற்கு ஒரே ஒரு வங்கி இருக்க வேண்டும். 


'என்னடா இவன் கதைவிடுகிறானே!' என்று நீங்கள் நினைக்கலாம். சம்பந்தம் உண்டோ, இல்லையோ, இங்கு சொன்னது போல, சம்பவம் ஒன்று சமீபத்தில்நடைபெற்று இருக்கின்றது. பதினைந்துக்கும் மேற்பட்ட, உலகத்தில் மிகமுக்கியத்துவமும், சக்தியும் வாய்ந்த நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து தனி ஒரு பணமான 'யூரோ'வை (Euro) உருவாக்கியது எம் கண் முன்னாலேயே நடந்தது. ஆசியநாட்டிலுள்ளவர்கள் அனேகருக்கு 'புதிய உலக ஒழுங்கு' அமைப்புப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தன் முகத்தை ஆசிய நாட்டினர்களுக்குப் பெரிதாகக் காட்டாத இந்த அமைப்பைப் பற்றி அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மக்கள் நிறையவே தெரிந்து வைத்திருக்கின்றனர். 


இதில் மறைந்திருக்கும் இன்னுமொரு செய்தி என்னவென்றால், The New World Orderஎன்னும் அமைப்பை, 'Free Mason' என்னும் அமைப்பே கொண்டு நடத்துகிறது என்று சொல்கிறார்கள். இந்த Free Mason அமைப்பு மிகவும் பிரபலம் வாய்ந்தது. அது மட்டுமில்லாமல் பலரால் மர்மம் நிறைந்தது என்றும் வர்ணிக்கப்படுவது. இந்த அமைப்பை  'மேசனிக்ஸ்' (Masonics) என்றும் அழைப்பார்கள். இந்த மேசனிக்ஸ் என்பது மதம் சார்ந்தது என்றும், கடவுளுக்கு எதிரானது என்றும் இரண்டு விதமான கருத்துக்கள் இருந்தாலும், நாம் அதற்குள் போகத் தேவையில்லை. ஆனால் இந்த அமைப்பு மிகவும் ஆளுமையுள்ள அமைப்பு என்பது மட்டும் உண்மை ஆகும். 


இந்த அமைப்புக்கு எனப் பல சின்னங்கள் இருந்தாலும், கீழே படத்தில்கொடுத்திருப்பதுதான் அதன் முக்கிய சின்னமாகும்.




இந்தப் படத்தில் உள்ள அடையாளத்தையும், டென்வெர் விமான நிலையக்கல்வெட்டில் இருந்த அடையாளத்தையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் மேசனிக்ஸ் அமைப்பு மேலும் சில சின்னங்களைத் தமக்கெனவைத்திருக்கின்றது. மேலே படத்தில் காட்டப்பட்ட கணித வரை கருவிகள்,ஒற்றைக் கண், ஐந்து நட்சத்திர வடிவம், ஆறு நட்சத்திர வடிவம், கைவிரல்களை மடக்கிக் காட்டும் ஒருவித சைகையான அடையாளம், ஆங்கில 'G' என்னும் எழுத்துஎன்பவற்றுடன் ஆச்சரியகரமாக பிரமிட் சின்னமும் மேசன்களின் சின்னங்களாகும். 


















இந்த மேசனிக்ஸ் அமைப்பின் ஆளுமை பற்றிச் சொல்வதானால், நான் ஒரே ஒருசம்பவத்தை மட்டும் சொன்னால் உங்களுக்கு அதன் தீவிரமும், அதிகாரமும் புரியும்.அமெரிக்காவின் ஒரு டாலரை உங்களில் அநேகர் பார்த்திருக்கலாம். அந்த ஒருடாலரில் (One Dollar Note) இருக்கும் படம் இது. 








இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் உள்ள 'NERVUS ORDO SECLORUM' என்னும் லத்தீன் வார்த்தைகள் 'Secular New Order' என ஆங்கிலத்தில் அர்த்தம் தருகிறது. இது New World Order என்று தவறாக அர்த்தப்படுத்தப்படுகின்றது என்று விக்கிப்பீடியா(Wikipedia) தெரிவித்தாலும், இல்லை இது மறைமுகமாக அதையே குறிக்கின்றது எனப் பலர் அடித்துச் சொல்கின்றனர். அவற்றின் விபரங்களை நீங்கள் பல இணையத் தளங்களில் காணலாம். அது தவிர அமெரிக்க டாலரில் ஏன் லத்தீன் வார்த்தைகள் வரவேண்டும் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மேசன்களின் அடையாளமான ஒற்றைக் கண்ணும், பிரமிட் அடையாளமும் அங்கு வர வேண்டிய அவசியமே இல்லை எனக் கேள்விகள் வருகின்றது. அத்துடன் அந்தப் பிரமிட்டின் அடுக்குகள் மொத்தமாக 13 ஆகவும் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்தப் 13 என்னும் இலக்கம் மேசன்களின் முக்கிய இலக்கங்களில் ஒன்று என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். சரி, இந்தப் 13 படிகள் என்பது தற்செயலாக அமைந்தது என்று நாம் எம்மைச் சமாதானப்படுத்தினால், அதே டாலரில் இருக்கும் இன்னுமொரு  படம் எம்மை அசர வைக்கிறது. அந்தப் படத்தில் இருக்கும் அமெரிக்கக் கழுகு, தன் இடது காலில் வைத்திருக்கும் இலைகளின் எண்ணிக்கையும்,வலது காலில் வைத்திருக்கும் அம்புகளின் எண்ணிக்கையும் தற்செயலில்லாமல் 13ஆக இருக்கிறது. அது மட்டுமா? அதில் செங்குத்தாக வரையப்பட்டிருக்கும் கறுப்பு வெள்ளைக் கோடுகளின் எண்ணிக்கை 13. மேலே இருக்கும் லத்தீன் எழுத்துகள் மொத்தம் 13. அதற்கும் மேலே இருக்கும் நட்சத்திரங்கள் 13. இதற்கு மேலும் 13என்பது தற்செயல்தானா என்பதை நீங்களே முடிவு செய்துவிட்டு, படத்தில் எண்ணிப் பாருங்கள்.






"அடப் போங்கப்பா! எதைப் பார்த்தாலும் உங்களுக்குச் சந்தேகம்தான்.எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒன்று சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்" என்று நீங்கள் சொல்லலாம். இருக்கட்டும், இதையும் பாருங்கள். அந்த டாலரில் இருக்கும் படத்தில் மேசனின் ஆறுகோண அடையாளத்தை வரையும்போது என்ன வருகிறது என்று தெரிகிறதா? MASON.







ஆச்சரியம் இத்துடன் முடிந்து விடவில்லை. அமெரிக்க ஒரு டாலரின் முன் பக்கம் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனே (George Washington) ஒரு மேசன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 









ஆபிரகாம் லிங்கன், கென்னடி ஆகிய இருவர் தவிர்த்து, அமெரிக்க ஜனாதிபதிகளில் அனைவரும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்,இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இந்தக் கருத்துகளை முன்னணியில் வைத்து'நிக்கலஸ் கேஜ்' (Nicolas Cage) நடித்து வெளிவந்த National Treasure (The Book of Secrets)என்னும் ஆங்கிலப் படம் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கின்றன. முடிந்தால் அவற்றைப் பாருங்கள். அத்துடன் அந்தப் படத்தின் போஸ்டர்களில் பிரமிட்டுக்குள் இருக்கும் ஒற்றைக் கண்ணையும் கவனிக்கத் தவறிவிடாதீர்கள்.  






இந்து மதத்தின் சின்னங்களில் ஒன்றான ஸ்வஸ்திக் சின்னத்தை, ஹிட்லர்தனக்கென்று ஒரு சின்னமாக மாற்றிவிட்டது சரித்திரத்தில் நடந்தது. அது போல,இன்னுமொரு சின்னத்தையும் தங்களுக்கென வைத்துக் கொண்டார்கள் மேசன்கள்.அது அவர்கள் கைகளாலேயே காட்டும் ஒரு சின்னம். அதை அமெரிக்காவின் எத்தனை பெருந் தலைகள் பாவித்திருக்கின்றனர் என்று நீங்களே பாருங்கள்.இவையெல்லாம் சில உதாரணங்கள்தான். பல கொடுக்க முடியவில்லை.  












இங்கு ஒரு விசயத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். இவர்களெல்லாம்மேசனாக இருந்தால், அப்படி இருப்பதில் எந்தத் தவறும் கிடையாது. மேசன் என்பது மறைந்து தொழிற்படும் ஒரு அமைப்பல்ல. வெளிப்படையாகவே இயங்கும் ஒருஅமைப்பு அது. அதில் அங்கத்தவர்களாக இருப்பது ஒன்றும் தவறானது அல்ல.உலகில் அதி உச்சத்தில் இருப்பவர்கள் பலர் 'நான் ஒரு மேசன்' என்று சொல்லத்தயங்கியதே இல்லை. ஆகையால் இங்கு அமெரிக்க ஜனாதிபதிகளைக் குறிப்பிடும்போது, அவர்கள் தவறு செய்பவர்கள் என்று சொல்வது என்பதல்ல அர்த்தம். மேசன்கள் பற்றிய ஒரு மர்மமான கருத்து உலகில் பலமாக உலவுகிறது என்பதை இங்கு சொல்லி, அதற்கு மேலும் சொல்வதற்காக இவற்றையும் சொல்ல வேண்டி இருக்கிறது அவ்வளவுதான். அதிகம் ஏன், ஜார்ஜ் வாஷிங்டன் போல, ஜார்ஜ் புஷ் கூட மேசன்களுடன் இருக்கும் படங்கள் வெளிப்படையாகவே கிடைக்கின்றன.நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது நிச்சயம் புரியும் என்று நினைக்கிறேன். 








இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இன்னுமொரு அதிர்ச்சியும் எம்மை வேறொரு புறத்தில் இருந்து தாக்குகிறது. நீங்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சி அது.எதிர்பார்க்காதது என்பது மட்டுமல்ல, அது பற்றிச் சொன்னால் நீங்கள் நம்பப் போவதே இல்லை. "நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது நடப்பதையே இப்படி மாற்றிச் சொல்கிறீர்களே, நீங்கள் எதைத்தான் மாற்றிச் சொல்ல மாட்டீர்கள்?" என்று திருப்பி என்னையே கேள்வி கேட்பீர்கள். அந்த அளவுக்கு நீங்கள் நம்பும் ஒன்று இது. இதை நான் சொன்னால், இதுவரை நான் சொன்னவை எல்லாமே, இப்படிப்பட்ட அபத்தங்கள்தான் என்று முடிவைக் கூட நீங்கள் எடுத்துவிடுவீர்கள். 


"அட! எதற்கு இவ்வளவு பீடிகை?" என்றுதானே கேட்கிறீர்கள். விசயம் அப்படி. நான் சொல்லப் போவதை முதலில் நீங்கள் நம்பாவிட்டாலும், சொல்லி முடிக்கும் வரை கொஞ்சம் பொறுமையாக வாசியுங்கள். முடிந்தால் அது பற்றி இணையங்களில் தகவல்களையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். சரி, இப்போ விசயத்துக்கு வருகிறேன்.


உலகம் வெப்ப மயமாதல் (Global Warming) என்பது தற்போது, மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு பாரிய பிரச்சினை. இதற்குக் காரணமாகச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதைக் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். அதிலும் குறிப்பாக உலகமெங்கும் பயணித்துக் கொண்டிருக்கும் வாகனங்கள் வெளிவிடும் புகையால், சுற்றுச்சூழல் மாசடைகிறது என்கிறார்கள். வாகனங்கள் வெளிவிடும் காபனீரொக்சைட் (CO2)என்னும் வாயுவும், மீதேன் (Methene - CH4) என்னும் வாயுவும் சுற்றுச்சூழலை நஞ்சாக்குகிறது என்றும் சொல்லப்படுகிறது. அதாவது எமது பூமி சூரியனின் வெப்பக் கதிர்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க தன்னைச் சுற்றி 'கிறீன் ஹவுஸ் விளைவு' (Greenhouse effect) எனப்படும் ஒன்றை, பூமியைச் சுற்றிப் பல வாயுக்களால் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கிறீன் ஹவுஸ்தான் எம்மை இதுவரை காத்து வருகிறது. இந்த கிறீன் ஹவுஸை மேற்படி இரண்டு வாயுக்களும் பழுதடைய வைக்கின்றன எனச் சொல்லப்படுகிறது. 






ஆனால் தற்போது விஞ்ஞானிகள் மிகப்பெரிய எழுத்துகளில், 'குளோபல் வார்மிங்என்பதே பொய்' என்று அலறுகிறார்கள். ஆமாம், நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள்.குளோபல் வார்மிங் என்று சொல்லப்படுவதே முழுப் பூசணியை சோற்றுக்குள் மறைக்கும் பொய் என்கிறார்கள். உலகம் வெப்பமாவது என்பது உண்மையிலும் உண்மைதான். அதை எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை. ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணமான மேற்படி வாயுக்களின் மாசுத் தன்மைதான் என்பது மகா பொய் என்கிறார்கள். இதைச் சொல்வது ஒருவர், இரண்டு பேர் கிடையாது.அமெரிக்காவில் மட்டுமே 31457 விஞ்ஞானிகள் இதற்கு எதிராக பெட்டிசன் ஒன்றை உருவாக்கி, அமெரிக்க அரசுக்கு அனுப்பினார்கள். அதில் 9029 பேர் Ph.D என்று சொல்லப்படும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் அனைவருமே குளோபல் வார்மிங் என்பது பொய் என்கிறார்கள். குளோபல் வார்மிங் என்பது உண்மைதான் என்று சொல்லும் விஞ்ஞானிகள் வெறும் 3100 பேர் மட்டுமே! அரசுக்கு விஞ்ஞானிகள் அனுப்பிய கடிதத்தின் ஒரு உதாரணம் இது. 






விஞ்ஞானிகள் சொல்லும் காரணம், காபனீரொக்சைட், மீதேன், நைட்ரஸ் ஒக்சைட்,நீராவி, ஓஸோன் ஆகிய ஐந்து வாயுக்களே, கிறீன் ஹவுஸ் விளைவுக்குக்காரணமாக இருக்கின்றன. இந்த உலக மாசுபடுதலுக்குக் காரணம் என்று சொல்லப்படும் காபனீரொக்சைட்டும் (CO2), மீதேனும்தான் (CH4) இந்த கிறீன் ஹவுஸ்உருவாவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் வாயுக்கள். அடிப்படையில் எமக்குஉதவியாக CO2, CH4 ஆகிய இரு வாயுக்களும் இருக்க, அந்த வாயுக்களால் எப்படிஎங்கள் பூமி மாசுபட முடியும் என்று கேட்கிறார்கள். இந்த இரு வாயுக்களும் எமக்கு உதவிதான் செய்ய முடியுமே ஒழிய, தீமையைச் செய்ய முடியாதவை. அப்படி இந்த வாயுக்களால்தான் பூமி வெப்பமாகின்றது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், இதுவரை வெளியிடப்பட்ட வாயுக்களால் அதிகபட்சம் ஒரு சதம பாகை வெப்பம்தான் அதிகரித்திருக்கலாம் என்கிறார்கள்.  


அப்படி என்றால் உலகம் வெப்பமாதல் இல்லையா என்கிறீர்களா? நிச்சயமாகவெப்பமாகிறது. நாங்கள் நினைப்பது போல இல்லாமல், மிகவும் அதிகமாகவேவெப்பமாகிறது. ஆனால் அப்படி வெப்பமாவதற்குக் காரணமே வேறு. சூரியன் சமீபகாலங்களாக மிகவும் ஆவேசமாகத் தன் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது.அதன் வெப்பக் கதிர்த் தாக்குதல் முன்னைவிட மிகவும் அதிகரித்துப் போய் உள்ளது. சொல்லப் போனால், 2012 இல் உலகம் அழியாவிட்டாலும் எதிர்வரும் மிகக் குறுகிய காலத்தில் உலகம் அழியும் அளவுக்கு சீற்றத்தைக் கொடுக்கிறது சூரியன்.






ஆனால் இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, உலகம் மாசாவதால் பூமிவெப்பமாகின்றது என்று கதைவிட ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர் என்றுசொல்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்படிப் பொய் சொல்வதில் "இவர்களுக்கு அப்படிஎன்ன நோக்கம் உண்டு?" என்றுதானே கேட்கிறீர்கள். ஒன்றுமில்லை, வெறும் பணமும் அதனால் கிடைக்கும் அதிகாரமும்தான் அவர்கள் நோக்கம். அதுவும் சாதாரணமான பணம் அல்ல. பில்லியன், ட்ரில்லியன் டாலர் பணம். ஆம்! புவி மாசடைதல் என்பதை வைத்து அறவிடப்படும் பெட்ரோலிய வரி என்பது நீங்கள் கற்பனையே பண்ண முடியாதது. குளோபல் வார்மிங் என்று சொல்லி மாசுக் கட்டுப்பாட்டிற்காக உள்ளீடு செய்யப்பட்ட பணம் மிக மிக மிக அதிக அளவிலான பணம். 


இதில் இரண்டு விசயங்கள் உள்ளன. 1. புவி வெப்பமாதலுக்கான உண்மையானகாரணம் மறைக்கப்படுகிறது. 2. புவி வெப்பமாதல் தவறாக வழி நடத்தப்பட்டு பணம் சம்பாதிக்கப்படுகிறது. முதலாவதில் எங்கள் தொடருக்குச் சம்பந்தமான உலக அழிவு உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதாகச் சொல்லியதில், உலகம் அழிந்தால் யார் தப்புவதற்கு முயற்சி செய்வார்களோ அவர்கள், அப்படித் தப்புவதற்குக் காரணமாக இருக்கும் கோடி கோடியான பணம் சம்பாதிப்பது. பின்னர் அதன் மூலம்  அசைக்க முடியாத சக்தியாக மாறுவது உள்ளடங்கி இருக்கிறது. 


இந்த குளோபல் வார்மிங் சிக்கலில் முக்கியமாகப் பலர் கையைக் காட்டும் நபர்கள் இருவர். அதில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி போட்டியில், போட்டியிட்ட மாபெரும் கோடீஸ்வரர் ஒருவர். அடுத்தவர் ஐ.நா. சபையில் மிக முக்கிய பதவியை வகித்துப் பின்னர் ஒரு சிக்கலில் பதவியைத் துறந்து, உலகின் உச்சியில் இருக்கும் கோடீஸ்வரர்களில் ஒருவர். இதில் நகைச்சுவை என்னவென்றால், அந்த இரண்டாவது நபர், தற்சமயம் தனது நாடான கனடாவை விட்டுவிட்டு சீனாவில் குடியிருக்கிறார். இந்தச் சம்பவம் உங்களுக்கு '2012' என்னும் ஹாலிவுட் படத்தை நினைவுபடுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல. இந்தத் தொடரில் நான் இவர்கள் இருவரின் பெயர்களையும் உங்களுக்குச் சொல்லப் போவது இல்லை. ஆனால் இணையம் இருக்கும் நிலையில் இதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சிக்கலான விசயமாக உங்களுக்கு இருக்கப் போவதில்லை. உங்கள் தேடலுக்கு இது ஒரு சவாலாக அமையும், தேடுங்கள்.


இதுவரை நான் சொன்னவற்றில் எங்குமே மாயா வரவில்லை. மாயா இனம் பற்றிச் சொல்லப் போய் எங்கேயோ சென்று விட்டேனோ என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவற்றுக்கும் மாயாவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எப்படி டென்வெர் விமான நிலையத்தில் வரையப்பட்டிருந்த சித்திரத்தில் மாயா இனச் சிறுமி இருந்தாளோ அதுபோல, இவற்றிலும் மாயா கலந்தே இருக்கிறது. 


அப்படி இங்கு மாயாபற்றி என்ன உள்ளது என்றுதானே கேட்கிறீர்கள். சொல்கிறேன்.அடுத்த தொடரில் சொல்கிறேன்.


2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-16

No comments:

Post a Comment