Saturday, June 30, 2012

நான் சராசரி



நான் சராசரி

நான் பெரிய சமூக நல விரும்பி இல்லை. அவசியம் இல்லாதவற்றில் மூக்கை நுழைப்பது, பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது போன்றவை எனக்கு சிறு வயதிலிருந்தே போதனை செய்யப்பட்டுள்ளது. நாம் உண்டு நம் வேலையுண்டு என்றிருப்பதே நன்மை பயக்குமென மிகத் தெளிவாக என் மனதில்  ஆழப்பொதிந்துள்ளது. என் சொந்த பிரச்சனைகளை நான் யாரிடமும் விவாதிப்பதில்லை. பொதுப்பிரச்சனைகளை மிக நெருக்கமானவர்களிடம் மட்டும் எப்போதாவது அது குறித்த செய்திகள் பார்த்தால் பேசுவதுண்டு. “இவனுங்க எப்பவுமே இப்படித்தான் சார்! இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க! இப்படித்தான் சுட்டுத்தள்ளனும்..சவூதி’ல மாதிரி தண்டனை வரணும் இங்கயும்! போன்ற சூடான விவாதங்களைக் கூட பிரயாணத்தில் பக்கத்தில் இருந்து வேடிக்கை மட்டும் தான் பார்ப்பேன். அவர்கள் கருத்து வேண்டி என் பக்கம் பார்த்தால் கூட நான் முகத்தை திருப்பிக்கொள்வேன்.

எனது அதிகபட்ச சமூகப்பொறுப்பினை நான் எனது பதிவிலோ முகபுத்தகத்திலோ பதிவாக அல்லது  செய்தி நிலையாகவோ   பிரகடனப்படுத்திக் கொள்வேன். அல்லது அன்னா ஹசாரே போன்ற அமைதி/அஹிம்சை போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவித்து மெழுகுவத்தி ஏற்றுவேன். லோக் பால் ஒரு சர்வரோக நிவாரணி என நம்புவேன். அப்படின்னா என்ன எனறு கேட்பவர்களுக்கு விளக்கமளிக்க முடியாமல் திணறுவேன். கடைசியாக சொல்லுவேன் அது வந்தா லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்காது. நம்ம காசு மிச்சம் என்று.

வாழ்வாதார போராட்டங்கள் எப்போதும் எனக்கு மிகையாக தோன்றும். இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் அண்டை நாட்டில் நடந்து கொண்டிருந்தாலும் அது என்னைப் பெரிதாக பாதிக்காது. என் நாட்டிலேயே சுனாமியோ பூகம்பமோ எது நிகழ்ந்தாலும் எனக்கு நிகழாதவரை ஒரு செய்தியே. குடிநீர் வேண்டி பெண்கள் தெருமுனையில் போராட்டம் என்றால் கூட நான் வேறுவழியில் விலகிப் போய்விடுவேன். காவலர்கள்,  அரசாங்க அதிகாரிகளை சந்திக்க நேர்ந்தால் அடக்கமாக நடந்துகொள்வேன். பின்னால் போய் கேவலமாக திட்டுவேன். அரசாங்க  வாகனம் செல்கிறது என மணிக்கணக்காக சாலையில் காக்க வைத்தால் கூட யார் போகிறார்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்கமாட்டேன். எனக்கு வேலை முடிய வேண்டுமென்றால் சபித்துக்கொண்டே லஞ்சம் கொடுக்க தயங்க மாட்டேன். வேலையை விட்டுட்டு யார் அலைவது என அதை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்வேன்.

எனது கோபங்களை வெறுப்புகளை கொலைவெறியை, கொப்பரை கழுவில்(wash basin) சிக்கிக்கொண்ட பூச்சியையும் கழிவறையில் கரப்பான்பூச்சியையும் தண்ணீர் ஊற்றிக்கொன்றோ, இரவு முழுக்க கத்திக்கொண்டிருக்கும் நாய்க்குட்டிகளை காம்பவுண்டில் இருந்து துரத்தியோ, வயதான பிச்சைக்காரருக்குக் கூட சில்லறை இல்லை என தவிர்த்தோ பாக்கிங் செய்து வரும் பிளாஸ்டிக் குமிழ்களை உடைத்தோ, பழைய பேப்பர்களை சுக்குநூறாக கிழித்தோ தீர்த்துக்கொள்வேன்.

20 குழந்தைகள் சாப்பிடும் செலவில் நான் ப:பே செல்வேன். கொடுத்த காசுக்கு நாசூக்காக சாப்பிடுகிறேன் பேர்வழி என நாகரிகம் கடைப்பிடிப்பேன். ஓட்டுப் போட மாட்டேன். எந்த ஆட்சி வந்தாலும் குறைப்பட்டுக்கொள்வேன். என்னைப் பொறுத்த வரையில் அரசியல் ஒரு சாக்கடை. எனது அடிப்படை உரிமைகள் சில மழுங்க அடிக்கப்படுவது தெரிந்தும் பெரிதாக வருத்தப்பட மாட்டேன். என்கவுண்ட்டர்களுக்கு சப்போர்ட் செய்வேன். பெட்ரோல் விலை ஏறினால் பஸ்ஸில் போவேன். பஸ் டிக்கெட் விலை ஏற்றினால் ஷேர் ஆட்டொ மாறுவேன். இந்த நாட்டில் வாழ முடியாது என சொல்லுவேன். மனித உயிருக்கு இங்கு மதிப்பே இல்லை என சலித்துக்கொள்வேன். ஆனாலும் ஒரு விபத்தைப் பார்த்துக் கூட என் வாகனம் நின்றிருக்காது. டிராபிக்கை குறை சொல்வேன். ஆனால் சமயம் கிடைக்கும் போது நானும் சிக்னல்கள் மீறுவேன். பின்னால் இருப்பவர்கள் நிற்க விடமாட்டார்கள் என சாக்கு சொல்வேன்.

க்ளோபல் வார்மிங்’ஆ? சூரியன் அழிந்துவிடுமா? பூமி மூழ்கிவிடுமா? அதன் முழு கொடுமைகள் ஆரம்பிக்கும் வரையில் நான் உயிரோடு இருப்பேனா தெரியாதே. என் எத்தனாவது தலைமுறை அப்போது இருக்குமோ? அதற்குள் வேறு கிரகத்தில் வாழ கற்றுக்கொண்டுவிடுவார்கள் என அதை டீலில் விட்டுவிடுவேன். மின்சார தட்டுபாடா ? மின்சாரத்தை சேமிக்க எவ்வித வழிமுறைகளையும் கையாளாமல் மின்வெட்டை குறை சொல்லுவேன். இன்வெர்ட்டர் இன்ஸ்டால் செய்து எனக்கு வேர்க்காமல் பார்த்துக்கொள்வேன். எல்லாவற்றிற்கும் உடனடித்தீர்வு ஒன்றைத் தான் என் மனம் தேடும்.

பறவைகள் வாழும் சதுப்பு நிலங்களில், ஏரிகளில் குப்பை கொட்டுவேன். குப்பை நிரம்பி ஒரு குப்பை மேடான பின்பு அதை நிரப்பி ஒரு ப்ளாட் கட்டப்படும். அதிலும் அன்றைய மார்க்கெட்டின் குறைத்த ரேட்டில் ஒன்றை வாங்கிப்போடுவேன். அழிந்து வரும் பறவைகள், காடுகள், மிருகங்கள் குறித்த எந்த ஒரு பிரக்ஞையும் என்னிடத்தில் இருந்துவிடாது. என் தலைமுறைக்கு சொத்து என்ன விட்டுசெல்கிறேன் என வருத்த‌ப்படும் அளவுக்குக் கூட எம்மாதிரியான உலகத்தை விட்டுச் செல்கிறேன் என யோசிக்கமாட்டேன்.

என்னைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. என்னை என குடும்பம், சமூகம் வளர்த்திருப்பது இப்படித்தான். கூடங்குளம் பற்றிய ஒரு கவியரங்கத்திற்குப் போகிறேன் என சொன்னதற்கு என் அம்மாவின் குழப்பமான ஒரு பார்வை ஆயிரம் கேள்விகளையும் பயங்களையும் பறைசாற்றும். வர்ரதுக்கு மணி ஆகிடுமா என்பதிலிருந்து யோசிக்கமுடியாத ஒரு புள்ளி வரை அது நீளும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு என் பயாலஜிக்கல் கிளாக் வேலை செய்கிறதோ இல்லையோ அலைபேசி அழைக்க ஆரம்பித்துவிடும். பெண்ணாக  இருந்தால் இவ்வகையான வரையறைகளுக்கு அழுத்தமான நியாயங்களைக் கற்பித்துவிடும்.

இப்படி நாளும் பொழுதும் கழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில், சராசரித்தனங்களுக்கு அப்பாற்பட்டு சில கருத்துக்களை பதிந்து வைக்க, பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். எப்போதும் அதற்காகவே இயங்கி கொண்டிருப்பவர்கள் சொல்வது ஒரு வகையில் புளித்துப்போயிருக்கும் நேரங்களில், சமயத்தில் சராசரிகள் சொல்வது எடுபடக்கூடும். இவனே சொல்கிறானே என்று. அப்படி ஒரு சராசரியின் குரலாக,


புலம்பலை தொடர்கிறேன்…




No comments:

Post a Comment