Tuesday, June 19, 2012

கோயம்பேடு காய்கறிச் சந்தை


மலையெனக் குவியும் காய்கறிகள்: கோயம்பேடுக்கு ஒரு செல்கை:


சென்னைப் பெருநகர மக்களின் அன்றாட காய்கறித் தேவையைப் பூர்த்தி செய்யும் மிகப் பெரிய சந்தை கோயம்பேடு காய்கறிச் சந்தை. இரண்டு நாட்கள், கோயம்பேடு பற்றிய அறிய சென்றிருந்தோம். இந்தியாவில் மிகப் பெரிய சந்தையாகத் திகழும் இந்தக் கோயம்பேடு சந்தைதான், பல ஆண்டுகளுக்கு முன்னால் பாரிமுனை அருகில் கொத்தவால்சாவடி சந்தை என்ற பெயரில் இயங்கி வந்தது. இப்போது சென்னையின் புறநகரில் அமைந்திருந்தாலும் புறநகர் பேருந்து நிலையம் இங்கு உருவாக்கிய பிறகு இப்போது சென்னையின் இதயமாக- ஒரு பெரும் நகரத்தின் குறியீடாகத் திகழ்கிறது. தினமும் எண்ணூறு சரக்குந்துகளில் காய்கறிகள் இங்கு வருகிறது. 295 ஏக்கர் பரப்பளவில் காய்கறி, பழம் மற்றும் பூக்கள் விற்பனைக்கு என இங்கு 3,194 கடைகள் செயல்படுகின்றன. சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்லும் இடமாகத் திகழ்கிறது இச் சந்தை.


ஆந்திரா, கர்நாடகா, (கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்துதான் கொண்டுவரப்படுகின்றன. தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. ஏறத்தாழ நானூறு லாரிகளில் அங்கிருந்து மட்டும் வருகிறது. தமிழன் தலையில் தான் விளைவித்த காய்கறிகளை வைத்து பணம் பார்க்கும் கர்நாடகம் – காவிரி தண்ணீர் தருவதில் மட்டும் தொடர்ந்து முரண்டுபிடிப்பது ஏனோ.) மராட்டியம் போன்ற வெளி மாநிலங்களிருந்தும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் இந்தச் சந்தைக்குக் கொண்டுவரப்படுகிறது. இந்தக் காய்கறிகள்தான் சிறு வியாபாரிகள் மூலம் சென்னை முழுதும் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு கொடுக்கிறது இந்தக் கோயம்பேடு காய்கறி சந்தை.


கோயம்பேடுக்கு அருகில் வசிப்பவர்கள் இங்கே வந்து தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொள்கிறார்கள். சென்னையின் இதர பகுதி மக்களுக்கு- அந்ததந்த பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் இங்கு அதிகாலையிலேயே வந்து காய்கறிகளை கொள்முதல் செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். மொத்தத்தில் சென்னையின் அனைத்து பகுதி மக்களுக்குமான காய்கறி தேவையை பூர்த்தி செய்கிறது கோயம்பேடு.


நள்ளிரவு இரண்டு மணி முதல் வண்டிகளில் காய்கறிகள் வரத் தொடங்குகின்றன. நீண்ட வரிசையாக காத்திருந்து ஒவ்வொரு லாரியாக சந்தை வளாகத்துக்கு உள்ளே வந்து காய்கறிகள் இறக்கப்படுகிறது. காய்கறி ஏற்றி வரும் வண்டிகளுக்காக தேநீர் அருந்தி கொண்டும் – உரையாடிக் கொண்டும் காத்திருக்கின்றனர் சுமை தூக்கும் தொழிலாளர்கள். ஒவ்வொரு லாரிக்கும் நான்கு ஐந்து பேர் என சுமை தூக்கும் தொழிலாளர்கள் காய்கறி மூட்டைகளை இறக்குகின்றனர். இவர்கள் மூட்டை கணக்கில் பணம் பெறுகிறார்கள். பெரும் இரைச்சல் மிகுந்த நகரமான சென்னை மாநகரம் நிசப்தமாக இருக்கும் வேளையில் மிக சுறுசுறுப்பாகவும் சுவாரசியமாகவும் இந்தப் பணி நடக்கிறது.


லாரிகளுக்கும் கடைகளுக்கும் வேகமாக நடந்து விளைந்த காய்கறிகளை முதுகு வளைந்து ஏந்திச் செல்லும் அந்தத் தொழிலாளர்களுக்கு சுமையின் அழுத்தம் சுகமாக இருக்கிறது போலும். இருந்தாலும் நள்ளிரவு வேளையின் இதமான காற்று மூட்டை தூக்கும் தொழிலாளர்களின் வியர்வையை துடைத்து விடுகிறது. பொழுது புலர புலர, வரிசையில் நின்ற சரக்குந்துகளும் ஒவ்வொன்றாக வெளியே விலகிப் போகிறது. காலை ஆறு மணிக்கெல்லாம் அனைத்து வகைக் காய்கறிகளும் கடைகளுக்குள் அடைக்கலம் அடைந்து விடுகிறது. இந்தக் காய்கறிகள் எப்படி வருகின்றன என்பதை அறிந்துகொள்ள ஒரு மொத்த வியாபாரியிடம் பேசினோம்.


தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் வரும் காய்கறிகள், இங்கு முகவர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளி மாநில மொத்த வியாபாரிகள் தங்கள் முகவர்களை கோயம்பேட்டிலேயே தங்க வைத்து அவர்கள் மூலம் வியாபாரம் செய்கின்றனர். அந்த முகவர் கொள்முதல் செய்த காய்கறிக்கான தொகையைப் பெற்று காய்கறிகளை அனுப்பி வைத்தவருக்கு பணத்தைக் கொடுத்து விடுவார். தமிழகத்திலேயே உள்ள பெரும் நிலக்காரர்கள் தங்கள் காய்கறிகளை தங்கள் உறவினரோ நண்பரோ இங்கு கடை வைத்திருந்தால் நேரிடையாக அவர்களுக்கு அனுப்பிவைத்து விடுகிறார்கள்.


இப்படி வந்து குவியும் காய்கறிகளை வாங்க வந்துகொண்டே இருக்கும் வியாபாரிகள், நுகர்வோர் என காலை ஐந்து மணி முதலே களைகட்டத் தொடங்கிவிடுகிறது அந்த அகன்ற வளாகம். வளாகத்தின் வாயிலில் சிறு வியாபாரிகளின் கூட்டம் அங்காங்கே காணப்படுகிறது. ஆமாம் பணம் குறைவாகவோ அல்லது பணம் இல்லாதவர்கள்- வட்டிக்கு விடுவோரிடம் மணிக் கணக்கு அடிப்படையில் வட்டிக்கு பணம் பெற்று காய்கறிகளை வாங்குகிறார்கள். ஆயிரம் ரூபாய் கேட்டால் வட்டிக்குத் தருவோர் நூறு ரூபாய் பிடித்தம் செய்துகொண்டு தொள்ளாயிரம் ரூபாய் தருவார்கள். ஒரு மணி நேரம் கழித்து பணம் பெற்ற சிறு வியாபாரி ஆயிரம் ரூபாய் தர வேண்டும். இது நியாயமல்ல என்றாலும் இப்படி பணம் தருவதற்கே வட்டிக்கு விடுவோர் தயங்குகிறார்கள். தொடர்ந்து தன்னிடம் பணம் பெற்று சரியாக பணம் கொடுப்பவருக்கே முதலிடம் தருகிறார்கள். புதியவர் யாராவது பணம் கேட்டால் வட்டிக்குக் கொடுப்பவருக்கு தெரிந்தவர் சிபாரிசு செய்யவேண்டும். பணம் பெற்றவர்கள் காய்கறிகளை விற்று பணத்தை திரும்ப செலுத்தி தனக்குக் கிடைத்த சிறு லாபத்தோடு வீடு செல்கிறார்கள்.


சந்தைக்கு உள்ளே கடை வைத்திருப்போருக்கு இந்த நிலைமை இல்லை. கடைக்கு அரசிடம் விண்ணப்பித்து அனுமதி கிடைத்து விட்டால் போதும். காய்கறி வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கிறது. தினமும் ஆயிரம் ரூபாய்க்கும் கூடுதலாக லாபம் பார்க்கிறார்கள் இந்த வியாபாரிகள். காய்கறி கடைகள் மட்டும் ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. பண்டிகைக் காலங்களில் கூடுதல் வருமானம் கிடைக்கிறது இவர்களுக்கு. எங்கோ ஒரு விவசாயி விளைவித்த காய்கறிகள் எத்தனை பிரிவினருக்கு வேலை ஏற்படுத்தி தருகிறது என்ற பெருமிதம் இங்கு கண்ட காட்சிகள் நமக்குத் தருகிறது. ‘இந்தியாவின் இதயம் கிராமங்கள்தான்’ என்ற வார்த்தைகள் எவ்வளவு சரியானவை என்று எண்ணிக்கொண்டே வெளியே வந்தபோது அழுகிய காய்கறி, பழங்களின் கழிவுகள் அனைத்தும் மலை போல் குப்பைகளாய்த் தேங்கிக் கிடக்கின்ற காட்சி கவலையை ஏற்படுத்தியது.


இதுபற்றி கோயம்பேடு வியாபாரிகள் சங்க செயலாளரிடம் விசாரித்தோம். குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு விடப்படுகிறது. அவர்கள், வாரத்தின் அனைத்து நாட்களிலும் குப்பைகளை எடுப்பதில்லை என்று குறை கூறுகிறார்கள் வியாபாரிகள். இவைகளை உடனுக்குடன் அள்ளாமல் விட்டு விடுவதால் குப்பைகள் மக்கி துர்நாற்றம் அடிக்கிறது. மழை நேரத்தில் இந்த சந்தை வளாகமே சகதிக்காடாகி நடக்கும் இடமெல்லாம் சாக்கடையாக காணப்படுவதை நாமும் கண்டிருக்கிறோம். தினமும் பல்லாயிரக் கணக்கானோர் நடமாடும் இந்த வளாகத்தை இன்னும் சுகாதாரத்தோடு வைத்திருந்தால் கோயம்பேட்டின் பெருமை அதிகமாகப் பேசப்படும்.

No comments:

Post a Comment