Sunday, July 01, 2012

ஆப்ரா வின்ஃப்ரெ


ஆப்ரா வின்ஃப்ரெ (The Oprah Winfrey )

"திருமணம் ஆகாத ஆணுக்கும் பெண்ணுக்கும் மகளாக பிறந்தவள் நான், அதனால் பாட்டி வீட்டில் வளர்ந்தேன். சிறிய வயதில் தாய் தந்தையரின் அன்புக்கு ஏங்கிய எனது சுட்டித்தனத்தை பொறுக்க முடியாமல் என் பாட்டி என் அம்மா வீட்டுக்கு துரத்தி விட்டார். நான் அங்கு வந்தது பிடிக்காத என் தாய் என்னை வெறுத்தார். அந்தக்கால கட்டத்தில் என் தாயின் உறவினர் சிலர் சிறுமி என்று கூட பாராமல் என்னை கதற கதற கற்பழித்தனர். பதினான்காவது வயதிலேயே கர்ப்பமாகி குழந்தையும் பெற்றேன். குறை பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தை சில நாட்களிலேயே இறந்து போனது. எவருடைய மடியிலாவது முகம் புதைத்து வலி தீரும் வரை அழ வேண்டும் போல இருந்தது"

பிரபலத்தின் உச்சியில் இருந்த ஒரு பெண் தன் கெளரவம் பாதிக்கப்படுமே என்று கொஞ்சமும் அஞ்சாமல் மில்லியன் கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்தக் கதையைக் கூறியபோது ஒரு தேசமே வாயடைத்துப் போனது.

குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் என்பதுதான் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட தலைப்பு. அந்த நிகழ்ச்சியை வழிநடத்தியவரே கூறிய தன் சொந்தக்கதை அது. அதன்பிறகு பலர் தங்களது கருத்துக்களைகூற "குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்" என்று ஒரு புதிய சட்டத்தையே அறிமுகம் செய்தது அந்த தேசம். அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் அந்தப்பெண் எதைப்பற்றி பேசினாலும் அந்தக் கருத்துகள் நாடு தழுவிய அளவில் சிந்தனைகளை தூண்டிவிட்டன, பலரின் மனசாட்சிகளை கிண்டிவிட்டன.

மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதன் முன் மண்டியிட்டன. அவரது நிகழ்ச்சியில் முன்பின் தெரியாத ஒரு எழுத்தாளர் தோன்றினால் அடுத்த நாளே அவர் எழுதிய புத்தகங்களின் விற்பனை விண்ணை முட்டும். ஒருமுறை மாடுகளுக்கு ஏற்படும் மூளைக் காய்ச்சல் நோய் பரவியிருந்த சமயத்தில் தனக்கு 'ஹேம்பர்கர்' சாப்பிட பயமாக இருக்கிறது என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்ன ஒரு வார்த்தையால் அந்த தேசத்தின் மாட்டிறைச்சி வியாபாரமே நொடித்து போகுமளவுக்கு மோசமடைந்தது.

அந்த அதிசயப்பெண் யார்? என்பது இந்நேரம் உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். இன்று 132 நாடுகளில் அவரது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அமெரிக்காவில் மட்டும் தினசரி சுமார் 22 மில்லியன் பேர் சலிப்பு தட்டாமல் அந்த நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கின்றனர். இத்தனைக்கு அது ஒரு இசை நிகழ்ச்சியோ, விளையாட்டு நிகழ்ச்சியோ, கதம்ப நிகழ்ச்சியோ அல்ல. Talk Show எனப்படும் பேச்சு நிகழ்ச்சி. ஆம் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை எவரும் எட்டாத சிகரங்களை தொட்டு இன்றும் சின்னத்திரையின் ராணியாக வலம் வந்துகொண்டிருக்கும் ஆப்ரா வின்ஃப்ரெயைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.


1954 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாநிலத்தில் Kosciusko என்ற ஊரில் பிறந்தார் Oprah Gail Winfrey. திருமணம் செய்து கொள்ளாத Vernon Winfrey & Vernita Lee இருவரும் மகள் ஆப்ரா பிறந்தவுடனேயே பிரிந்தனர். பெற்றோரின் அன்பும் அரவனைப்பும் இல்லாமல் பாட்டியின் வீட்டில் வளர்ந்தார் ஆப்ரா. ஆறு வயதானபோது அவர் தாயுடன் வாழச் சென்றார். அந்தக்கால கட்டத்தில்தான் உறவினர்களின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் 13 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ஆப்ரா இளம் குற்றவாளிகளை தடுத்து வைக்கும் இல்லத்திற்கு முதலில் அனுப்பப்பட்டார் அங்கே இடம் இல்லாததால் உடலிலும், மனதிலும் பல ரணங்களை சுமந்து கொண்டு தனது 14 ஆவது வயதில் Nashville-யில் இருந்த தனது தந்தையின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

முடி திருத்தும் வேலை செய்து வந்த தந்தை மிகவும் கண்டிப்பானவர். தனது மகளுக்கு சில விதிமுறைகளை வகுத்துக் கொடுத்து அவற்றைப் பின்பற்ற சொன்னார். வாழ்க்கைக்கு வழிகாட்டினார் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகத்தை படித்து அதைப் பற்றி அறிக்கை எழுத வேண்டும். தினசரி ஐந்து புதிய சொற்களை கற்றுக்கொள்ளா விட்டால் ஆப்ராவுக்கு இரவு உணவு கிடையாது. இரவில் வெகுநேரம் வெளியில் இல்லாமல் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இடையே கட்டுக்கோப்பாக வளர்ந்தார் ஆப்ரா. நிறைய வாசித்ததால் அவருக்கு நன்றாகவும், சுவாரசியமாகவும் பேசும் தைரியம் வந்தது. பள்ளியில் நாடகக் குழுவில் சேர்ந்து சிறந்த பேச்சாளருக்கான ஆயிரம் டாலர் பரிசை வென்றார்.


Nashville - நகரத்தின் Miss Fire Prevention - என்ற தீ தடுப்புப் பட்டத்தை வென்றார். அதனை வென்ற முதல் கருப்பினப் பெண் அவர் என்பது குறிப்பிடதக்கது. 1971- ஆம் ஆண்டில் அவருக்கு 17 வயதானபோது Miss Black Tennessee என்ற கருப்பு அழகி பட்டத்தை வென்றார். அதே ஆண்டு W-VOL என்ற வானொலியில் அவருக்கு பகுதிநேர செய்தி வாசிப்பாளர் வேலை கிடைத்தது. ஒளிப்பரப்புத் துறையில்தான் பணியாற்ற வேண்டும் என்று விரும்பிய ஆப்ராவுக்கு படித்துக் கொண்டிருந்தபோதே CBS தொலைக்காட்சியில் இரவு செய்திகள் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பணியை செய்து கொண்டே 1976 ஆம் ஆண்டு டென்னஸி ஸ்டேட் ( Tennessee State University) பல்கலைக்கழகத்தில் பேச்சுத்தொடர்பு மற்றும் நாடக கலைத் துறைகளில் பட்டம் பெற்றார். அதன் பிறகு Baltimore வந்த ஆப்ரா இன்னொரு புகழ் பெற்ற தொலைக்காட்சி நிறுவனமான ABC-யில் ஒரு நிருபராகவும், செய்தி வாசிப்பாளராகவும் சேர்ந்தார்.



-முக புத்தகம்

No comments:

Post a Comment