Sunday, July 29, 2012

என்னுடைய கிராம வாழ்க்கை


அம்மா இடுப்பில் உட்கார்ந்து நிலா சோறு, பால் சோறு சாப்பிட்ட அனுபவம்….

பள்ளிக்கூடம் போகும்போது மிட்டாய் வாங்கிக்கொள் என்று எங்கள் வீட்டில் 10 காசு கொடுப்பார்கள்.

படிக்கும்பொழுது, திருவள்ளுவரும் ஒரு குறிப்பிடத்தகுந்த எதிரி.
ஆசிரியருக்கு நெல், உளுந்து, பயறு வகைகள் கொண்டு வருவதும் படிப்பின் ஒரு அங்கம்.

பள்ளிக்கூடத்துக்கு போடுற காக்கி டிராயரின் பின்பக்கம் அப்பப்ப தபால் பெட்டி அமைஞ்சிடும்.

பூத கண்ணாடியை சூரிய ஒளியில் வைத்து காகிதத்தை கொளுத்த முயற்சி பண்ணியதுண்டு.

குடுகுடுப்பை காரன், புள்ள புடிக்கிறவன் வந்து புடிச்சிக்கிட்டுப் போய்டுவான்னு பயப்படுவோம்.

ஊமைத்தங்காயை புறங்கையில் அடித்து கையை சுழற்றி அதில் வரும் ரத்தத்தை அளவெடுப்போம்.

கிட்டிபுள், பம்பரம் தான் எங்களுடைய சிறந்த விளையாட்டு.

தட்டான்பூச்சி பிடித்த அனுபவம், ஆரா மீன் என நினைத்து பாம்பை பிடிக்க போய் கடி வாங்கிய அனுபவமுண்டு…

தூண்டில் போட்டு குளக்கரையிலும், வாய்க்காலிலும் மீன் பிடிப்போம்.

மழைநீரில் கப்பல் செய்து விளையாடுவோம்.

கார்த்திகை பொறி செய்து உடம்பில் பட்ட தீ காயங்கள்….

ஆடாதொடா பூவிலிருந்து தேனை உறிஞ்சுவோம்.

வாய்க்கும் மூக்குக்கும் உதடு வழியா ஒரு ரோடு இருக்கும்.

விடிய விடிய பேய் ஓட்டுறதை வேடிக்கை பார்ப்போம்.

குளத்தில் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது விளையாடுவோம்(உள்நீச்சல் , வெளிநீச்சல் , சொருகல்,  படிதாண்டி சொருகல், பாலத்திலிருந்து குதித்தல், ஒருகரையிலிருந்து மறுகரைக்கு செல்லுதல்).

தாமரை பூ பறிக்க போய் தாமரை தண்டில் கால் சிக்கிய அனுபவம்.

பனை நுங்கு மற்றும் டயர் வண்டி ஒட்டியதுண்டு.

பனை ஓலையில் காற்றாடி விடுவோம்.

குளத்து நீரை கூட பயமில்லாம நம்பி குடிப்போம்.

எப்படா பெரிய பையன் ஆவோம் என்று நினைத்ததுண்டு.

யார் ஆட்சிக்கு வருவார் என்றெல்லாம் யாருமே நினைத்ததில்லை.

ஆடு, மாடு, கோழி, குருவி வளர்த்திருக்கேன். எல்லாவற்றுக்கும் செல்லபெயர் கூட வைத்ததுண்டு.

கன்றுகுட்டியோடு விளையாடிய அனுபவம் உண்டு.

சாராயக்கடை, கள்ளுக்கடை எல்லாம் இருந்தது!

பொங்கல் வாழ்த்துதான் மிக பெரிய பொக்கிஷம்!

ரேடியோ பெட்டிக்குள்ளே குட்டிக்குட்டி மனுசங்க இருக்காங்களான்னு ஆராய்ச்சி பண்ணியதுண்டு.

எங்க கிராமத்துக்குன்னு ஒரே ஒரு டிவிதான் இருந்துச்சு!

டிவியில படம் தெரியறதுக்கு முன்ன புள்ளிபுள்ளியா ஓடுறத வாயத்தெறந்துட்டுப் பார்ப்போம்.

“வாசிங் பவுடர் நிர்மா”, “நீயும் உஜாலாக்கு மாறிட்டியா”, “சொட்டு நீளம் டோய்” கலக்கலான விளம்பரமா இருந்தது.

எந்த திருவிழாவுல பார்த்தாலும் பட வசனம்தான் ஒலிபரப்பாகும்!

காளி, பெரியாச்சி அம்மன், முனீஸ்வரன் மற்றும் காத்தவராயன் சாமி வேஷம் போட்டு ஆடுபவர்களை பார்த்து பயபடுவோம்.

பெரிய திரை-ல தசாவதாரம், ராமாயணம் படம் போடுவாங்க.

மைக்செட் கட்டிக்கிட்டு விளம்பர நோட்டீஸ் போட்டுக்கிட்டு போற கார் பின்னாடியே ஓடுவோம்.

சினிமா போஸ்டர் ஒட்ற ஆளையே ஹீரோ கணக்கா பார்ப்போம்!

முதல்நாள் பார்த்த திரைபடத்திற்கு வகுப்பறையில் கதை சொல்வோம்.

தேனெடுக்க நாங்க போய் தேன்பூச்சி கொட்டியதுண்டு.

கடிச்சு கடிச்சே எங்க சட்டைக் காலரு பிஞ்சுபோயிரும்.

ஈர மணலில் தேங்காய் கொட்டாச்சியில் இட்லி சுடுவோம்.

யாரு ரஜினி கட்சி, யாரு விஜயகாந்த் கட்சின்னுதான் சண்டை!

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்……….

உங்களுக்கும் இதே மாதிரி அனுபவம் இருந்தால் சொல்லுங்களேன்

No comments:

Post a Comment