புத்தூர் சாப்பாட்டுக் கடை
சென்னையிலிருந்து மயிலாடுதுறை வந்து சேரும்வரை, திண்டிவனத்தில் எங்கே தலைப்பாக்கட்டு பிரியாணி நல்லா இருக்கும் ; வடை எங்கே நல்லா இருக்கும் ; போண்டா எங்கே நல்லா இருக்கும் ; இரவு உணவு எங்கே நல்லா இருக்கும் ; டீ எங்கே குடித்தால் டேஸ்டா இருக்கும் ; மல்லிகைப் பூவிலிருந்து பனங்கிழங்கு வரை ; கொய்யாப்பழத்திலிருந்து பட்டர் பிஸ்கட் வரை எங்கே சல்லீசாய் தரமாய் கிடைக்கும் என்பன போன்ற விவரங்கள் பொதுவாகவே எல்லா டிரைவர்களுக்கும் அத்துப்படி
எத்தனையோ தடவை மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றிருக்கிறேன் - வந்திருக்கிறேன். ஆனால் அந்த ஹோட்டல் இருந்த இடம் எனக்குத் தெரியாது. இந்த தடவைத்தான் சென்னை யிலிருந்து திரும்பும் சமயம் நண்பர் "பகல் சாப்பாட்டை புத்தூரில் சாப்பிடுவது போல் அரேஞ் செய்து கொண்டு கிளம்புவோம்" என்று சொன்னார். "அப்படி என்ன அந்த ஹோட்டலில் விஷேசம் இருக்கு?" என்று கேட்டேன். “நீங்க வந்து சாப்பிட்டு பாருங்க, அப்பத்தான் உங்களுக்கு புரியும். நீங்களும் மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பீர்கள் என்றார்.
மெர்சிடிஸ், ஸஃபாரி, டொயோடா, ஸ்விஃப்ட் என்று ஏகப்பட்ட கார்களைப் பார்க்கும் போது நாம் ஏதோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குத் தான் சாப்பிட வந்திருக்கிறோமோ என்ற பிரமையை ஏற்படுத்துகிறது. பகல் நேரங்களில் சாப்பிடுவதற்கு கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம் வந்து அப்புகிறது. அக்கம் பக்கத்து ஊர்களிலெல்லாம் ஆபீசில் வேலை செய்யும் அத்தனை பேரும் கார் போட்டுக் கொண்டு வந்து இங்கே சாப்பிட குழுமுகிறார்கள். கார் நிறுத்த இடமில்லாமல் அல்லாடுவதும் நடக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
சாதாரணமாய் கான்கிரீட் கட்டடத்தில் இயங்கும் ஹோட்டல் மாதிரியாக வுமில்லை. சொல்லப் போனால் இது சாப்பாடு ஹோட்டல் தானா என்று கேட்கு மளவுக்கு ஒரு குடிசை மாதிரி வேயப்பட்டு ஹோட்டல் மாதிரியான அமைப்பில் விஸ்தாரமாய் இருக்கிறது.
மெயின் ரோட்டை ஒட்டியே இந்த ஹோட்டல் இருப்பதால் காரை நிறுத்த கொஞ்ச தூரம் இடம் தேடி போட்டுவிட்டு நடந்து வர வேண்டி இருக்கிறது. வாசலில் மிகப் பெரிய தவ்வாவை வைத்துகூடை கூடையாய் இராலை கொட்டி பொறித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போதே சாப்பிடனும் என்ற பசி கிளம்பிவிடுகிறது. அந்த வாசனை ஊரையே தூக்குகிறது.
பின்னர் இடையிடையே வஞ்சிர மீனை ஸ்லைஸ் ஸ்லைசாக பொறிக்கிரார்கள். பார்க்கும் போதே நாஊறுகிறது. அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கணும் என்று மனசு சொல்கிறது என்றாலும்... உள்ளே நுழைந்தால் உட்கார இடம் பிடிக்கணுமே, ஆளாளுக்கு ஒவ்வோர் டேபிளில் நின்றுக் கொண்டோம். எது காலியாகுமோ அதற்க்கருகில் எல்லோரும் ஒன்று கூடிக் கொள்வோம் என்பது திட்டம்!!
ரெண்டு மணிக்கு மேலாகிவிட்டதால் எது கிடைத்தாலும் சாப்பிடலாம் என்கிற நிலையில் பசியும், பொறிக்கும் வாசனையும் நம்மை கிறங்கடிக்கிறது. ஒரு வழியாய் இடம் கிடைத்து உட்கார்ந்தாகி விட்டது. எல்லாமே நண்பர்தான் ஆர்டர் செய்தார். அவருக்குத் தான் தெரியும் இங்கே எது டேஸ்டாக இருக்குமென்று...!!
அருமையான அரிசியில் பளீரென்று சாப்பாடு. மீன் வறுவல், மீன் சால்னா, கோழி குழம்பு, அதற்கு கூட்டு வகைகள் என்று ஏராளமாய் கொண்டு வந்து வைக்கிறார்கள். அதில் கீரை மசியல் எனக்கு ரொம்ப இஷ்டமாய் இருந்தது. எல்லாம் போக இறால் பொறியலை விட மனசில்லை. அதுவும் ஆளுக்கொரு ப்ளேட். எது கேட்டாலும், மற்ற ஹோட்டல்களில் பசியடங்கியதும் கொண்டு வந்து கொடுப்பார்களே அதுமாதிரி இல்லாமல், கேட்டவுடன் தாமத மில்லாமல் கொண்டுவந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்த ஹோட்டலில் தான் பெரிய பெரிய பக்கெட்டுகளில் தயிரை பாலம் பாலமாக வெட்டியெடுத்து கஸ்டமர்களுக்கு அள்ளிக் கொட்டுவதை, அதுவும் போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு, எல்லாமே வயிறு நிறைந்த மாதிரி மனசும் நிறைந்து போனதென்னவோ நிஜம்!
வாசலுக்கு வந்து கல்லாபெட்டியருகே சர்வ் செய்தவர் கணக்குச் சொல்லி காசைக்கொடுக்கும் போது நானூத்தி சில்லறையோ ஐநூறோ கொடுத்த ஞாபகம். மற்ற நடுத்தர ஹோட்டல்களை கம்பேர் செய்யும் போது நாங்கள் ஆறு பேர் சாப்பிட்டதற்கு ரொம்ப மலிவானதாகவே தெரிந்தது. ஸோ, இதை மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கலாமே என்று மனசுக்கும் பட்டது.
இந்த வழியாய் போகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில், குடிசை என்று யோசிக்காமல் ஒரு தடவை, இங்கேயும் நுழைந்துதான் பாருங்களேன்!
இடம் : "புத்தூர்" - சிதம்பரத்திற்கும் சீர்காழிக்கும் நடுவே, இங்கிட்டும் அங்கிட்டும் ஏழு to எட்டு கிலோமீட்டர், கொள்ளிடம் பாலத்தை விட்டு இறங்கியதும் இருக்கிறது இந்த ஹோட்டல்!!
No comments:
Post a Comment